ஆத்திசூடி - ஔவையார் - 1-13


ஆத்திசூடி - ஔவையார் - 13ஆம் நூற்றாண்டு நீதிநூல்

நவீனப் பொழிப்புரை 

அறம் செய விரும்பு

அறம் செய்வதற்கு உனக்கு வசதி இல்லையென்றாலும் மனதளவிலாவது அறம் செய்யத் தயாராக இரு;


(அ)


எப்போதும் அறத்தையே நாட வேண்டும்; அப்படி செய்ய முடியாவிட்டாலும் மனதளவில் எப்போதும் அறமானதையே செய்ய விரும்ப வேண்டும்.


ஆறுவது சினம்


சினம் என்பது நிரந்தரமானதல்ல; அது ஆறக்கூடியதே. ஒருவர் மீது தீராத சினம் என்று ஒன்று ஏற்பட வாய்ப்பில்லை. ஆகவே யார் மீதாவது கோபம் வந்தால் அதைச் சிறிது நேரம் ஒத்தி வைத்தாலே அது காணாமல் போய்விடும். அதனால் அந்தக் கோபத்தால் விளையக்கூடிய தீமைகள் நிகழாது நம்மைப் பாதுகாக்கும். இதை நினைவில் வைத்துக் கொள்ளவே இந்த ‘ஆறுவது சினம்’.


இயல்வது கரவேல்


உன்னால் இயன்றதைச் செய்வதற்கு அஞ்சாதே; உன்னால் செய்ய முடிந்ததை அடுத்தவரிடமிருந்து மறைககாதே.


ஈவது விலக்கேல்


உன்னால் முடிந்ததைப் பிறருக்கு எப்போதும் கொடுக்கத் தயாராக இரு; ஒருபோதும் ‘இனி என்னால் யாருக்கும் எதுவும் கொடுக்க முடியாது அல்லது விருப்பமில்லை’ என்று சொல்லாதே.


உடையது விளம்பேல்


உன்னிடம் இருக்கும் செல்வத்தை ஊரறிய தம்பட்டம் அடித்துக் காட்டாதே. ஆடம்பரமாக இருக்காதே. அவசியத்தை மட்டும் வெளியே காட்டு.


ஊக்கமது கைவிடேல்


எதற்கான ஊக்கத்தையும் கைவிட்டுவிடாதே. பொன்னோ, பொருளோ, மண்ணோ, பெண்ணோ எதன் மீது ஊக்கம் கொண்டாலும் அதை விடாது தொடர்ந்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்.


எண்ணெழுத்து இகழேல்


படித்தவர்களிடம் பகடி பேசாதே. விவரம் தெரிந்தவர்களை ஏமாற்றினால் அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.


ஏற்பது இகழ்ச்சி


உன் மீது எறியப்படும் எந்தவொரு புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் தலைவணங்கி ஏற்பது அவமானகரமானது. புகழ்ச்சிக்கு மயங்கக்கூடாது, அதே சமயம் உன்னை யாரேனும் இகழ்ந்தால் அவர்கள் வெட்கும்படி செய்ய வேண்டும்.


ஐயமிட்டு உண்


தானம் செய்து உண். உன் உணவில் ஒரு பகுதியை எப்போதும் பிற உயிருக்குப் பகிர்ந்து கொடுத்த பின்னர் நீ உண்ணப் பழகு.


ஒப்புரவு ஒழுகு


உலகத்தோடு ஒத்து வாழ். உன் மனதிற்குள் நீ வேறொரு காலத்தில் வாழ்ந்தாலும், புறவுலகம் இயங்கும் வகையிலேயே சேர்ந்து ஒழுகு.


ஓதுவது ஒழியேல்


கற்பதை ஒருபோதும் நிறுத்தாதே. நீ படித்தவற்றை மீண்டும், மீண்டும் நினைவுகூர்ந்து பார்த்து நினைவில் கொள்.


ஔவியம் பேசேல்


புறம் பேசாதே, ஒருவர் மேல் கொண்ட பொறாமையினால் புறம் பேசி உன் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதே.


அஃகம் சுருக்கேல்


மனம் சுருக்கேல்; மனதில் தோன்றும் நல்ல விஷயங்களைத் தீய எண்ணங்களால் சுருக்காதே.