ஆத்திசூடி - ஔவையார் - 51-60


ஆத்திசூடி - ஔவையார் - 13ஆம் நூற்றாண்டு நீதிநூல்

நவீனப் பொழிப்புரை


சேரிடம் அறிந்து சேர்


நீ நட்பு கொள்பவருக்கு, சமுதாயத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு அறிந்து நட்பு கொள். உன்னை விட மிகப் பெரிய இடத்தில் இருப்பவர்களுடன் நட்பு பாராட்டுவது எளிதல்ல.


சையெனத் திரியேல்


உன்னைப் பற்றித் தாழ்வுணர்ச்சி கொள்ளாதே. எப்போதும் தலைநிமிர்ந்து, நம்பிக்கையோடு இரு.


சொற்சோர்வுப் படேல்


தடுமாறாமல் பேசக் கற்றுக் கொள். சபையில் தன்னம்பிக்கையுடன் பேசப் பழகு.


சோம்பித் திரியேல்


செய்வதற்கு வேலை என ஒன்று இல்லாமல் இருக்காதே. எப்போதும் ஏதாவது பணி செய்து கொண்டே இரு.


தக்கவன் எனத் திரி


உன்னிடம் ஒப்படைக்கப்படும் வேலையைச் செய்ய நீ தகுதியானவன் என்பதை நிரூபிக்கும்படி  நடந்துகொள்.


தானமது விரும்பு


வறியவருக்குக் கொடை அளிக்க விரும்பு.


திருமாலுக் கடிமை செய்


அரசனுக்குப் பணிந்து நட. அரசன் ஆணையை மீறி நடக்காதே.


தீவினை அகற்று


நீ செய்த பாவக் கணக்கைப் போக்குவதற்கான வழிகளைப் பின்பற்று.


துன்பத்திற்கு இடம் கொடேல்


வறுமை நிலைக்கு ஆட்படாதே. துன்பம் என்றால் வறுமை என்று பொருள். உன் திறமைகளை வளர்த்து, வறுமையை விரட்டு.


தூக்கி வினைசெய்


ஒரு வேலையை, அதை முன்பு செய்தபோது நடந்தவற்றை ஒப்புநோக்கி எளிதாகச் செய்யப் பழகு. தூக்குதல் என்றால் ஒப்புநோக்குதல் என்று பொருள்.