கொன்றைவேந்தன் - ஔவையார் - 31 - 40
கொன்றைவேந்தன்
ஔவையார் எழுதிய 12ஆம் நூற்றாண்டு நீதிநூல்
நவீனப் பொழிப்புரை
சூதும் வாதும் வேதனை செய்யும்
வாழ்க்கையில் விளையாட்டுத் தனமாக இருப்பதும், எப்போதும் சண்டை போடுவதும் துன்பத்தை உண்டாக்கும். வாயையும், மனதையும் கட்டி வை.
செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்
நல்வினை மறந்தால் தீவினை ஆளும். நன்மை செய்வதை எந்நாளும் விடாதே.
சேமம் புகினும் யாமத்து உறங்கு
சேமம் என்றால் சந்தோஷம். எத்தனை பெரிய மகிழ்ச்சியாக இருந்தாலும் அதைத் தலைக்கு ஏற்றிக் கொண்டாடாதே. அளவோடு மகிழ்ந்து அடக்கமாய் இரு.
சையொத்து இருந்தால் ஐயமிட்டு உண்
தேவையானதை விட அதிக செல்வம் உன்னிடம் இருந்தால் பிறருக்குப் பகிர்ந்தளித்த பின் எஞ்சியதைப் புசி. தனக்கு மிஞ்சியதை தானம் செய்.
சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
அதீதமாக உண்போர் அற்றுப் போவார்கள். அளவோடு உண்டு, வளமோடு வாழ்.
சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்
எதிலும் ஆர்வம் இல்லாது வாழ்பவர் சோம்பேறி எனப்படுவார்கள். சோம்பல் விலக்கு, ஊக்கமாய் இரு.
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
மூதாதையின் சொல்லை விட முதிர்ந்தது எதுவுமில்லை. மூத்தோர் சொல் மறவாதே.
தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை
தாயின் கருவறையை விட சிறந்த கோயில் எதுவுமில்லை. அன்னையின் உதரமே எல்லா உயிருக்கும் ஆதாரம்.
திரை கடலோடியும் திரவியம் தேடு
அலைகடலைக் கடந்தாவது ஐஸ்வர்யம் சேர். எப்பாடு பட்டேனும் செல்வம் ஈட்டு.
தீராக் கோபம் போரா முடியும்
அடங்காத கோபம் அழிவில் முடியும். கோபத்தை மடைமாற்றி, விவேகத்துடன் வாழ்.