வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

கடவுள் வாழ்த்து

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்

சரண அற்புதமலர் தலைக்கு அணிவோமே

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் முதல்வனாகிய ஐந்து கர ஆண்டவனின் பாதமலர்களைத் தலைக்குச் சூட்டித் தொடங்குவோம்.

நூற்பயன்

வெற்றி வேற்கை வீர ராமன்

கொற்கை யாளி குலசே கரன்புகல்

நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்

குற்றம் களைவோர் குறைவிலா தவரே.

கொற்கை நகரத் தலைவனாகிய, வெற்றிவேலைக் கையில் ஏந்திய குலமுதல்வன் வீரராமன் நற்றமிழ் கொண்டு பகரும் இந்த நறுந்தொகையைப் படித்துத் தங்கள் குற்றங்களை நீக்குவரே நற்குணதோர்.

1. எழுத்தறி வித்தவன் இறைவன் ஆகும்

கல்வி புகட்டுவார் கடவுளுக்குச் சமமாவார்.

2. கல்விக்கு அழகு கசடற மொழிதல்

கற்றதைத் தெளிவாக எடுத்துரைத்தலே அந்தக் கல்விக்கு அழகு.

3. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்

செல்வந்தருக்கு சொந்தபந்தங்களைப் போஷித்தல் அழகு.

4. வேதியருக்கு அழகு வேதமும் ஒழுக்கமும்

அந்தணருக்கு அவர்கள் ஓதும் வேதமும் பேணும் ஒழுக்கமும் அழகு.

5. மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை

நாடாளும் அரசனுக்கு நீதி வழுவாச் செங்கோல் அழகு.

6. வைசியருக்கு அழகு வளர்பொருள் ஈட்டல்

வாணிபம் செய்பவருக்கு நல்வழியில் பொருளீட்டுவது அழகு.

7. உழவர்க்கு அழகிங் குழுதூண் விரும்பல்

வேளாண் செய்பவருக்கு தம் நிலத்தில் உழுதுண்டு மகிழ்வதே அழகு.

8. மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்

மதியூகி அமைச்சருக்கு முன்கூட்டியே கணித்துக் கூறுதல் அழகு.

9. தந்திரிக்கு அழகு தறுக ணாண்மை

படைத்தளபதிக்கு நேர் நின்று போர் புரியும் வீரம் அழகு.

10. உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்

விருந்தினரோடு உண்ணும்போது இன்னும் சுவையாகும் உணவு அழகு.