திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14
11. ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.
ஒருநாள் சோறுண்ணாதே என்றால் முடியாதென்பாய். இரண்டு நாட்களுக்கு எதுவும் தர முடியாதென்றால் முரண்டு பிடிப்பாய். உன்னை நிரப்ப நான் படும் கஷ்டம் அறியாமல் துன்பம் தரும் என்னுடைய வயிறே, உன்னோடு வாழ்வதுதான் மிகவும் கஷ்டம்.
12. ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
ஆற்றங்கரையில் வேர்பிடித்து நிற்கும் மரமும், அரசப் பதவியும் ஒருநாள் வீழும். உழவுத் தொழில் செய்து வாழ்வதற்கு ஒப்பான வேறு பணியில்லை. மற்றெல்லாப் பணியும் ஒருநாள் விட்டுப் போகும்.
13. ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பர்-ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்யம் புவியதன் மே.
இந்த பூமி மீது மெய்யான வலிமையுடைவரை யாரால் அழிக்க முடியும்? வலிமையில்லாமல் இறப்போரை யாரால் தடுக்க முடியும்? ஓயாமல் இரந்து நிற்பவரை யாரால் திருப்திப்படுத்த முடியும்?
14. பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை-சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்.
இரந்துண்டு வாழ்வதைப் பெருமையாகப் பேசி பிறரிடம் யாசகம் பெற்று இந்தச் சிறிய வயிறை வளர்ப்பதற்கு, மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள மடிந்து போவதே மேல்.