திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 23 - 26

 23. வேதாளம் சேருமே வெளெருக்குப் பூக்குமே

பாதாள மூலி படருமே-மூதேவி

சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே

மன்றோரம் சொன்னார் மனை.

ஊரார் மத்தியில் ஒருவரைப் பற்றிப் புறம் பேசிச் சிரிப்பவர் வீடு நல்லணிகள் இழந்து, தீக்குறிகள் பெருகி மேடாகிப் போகும். ஓரம் சொல்லின் வாழ்வு சோரம் போகும்.

24. நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்

ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்-மாறில்

உடன்பிறப்பு இல்லா உடம்புபாழ் பாழே

மடக்கொடி இல்லா மனை.

திருநீறு அணியாத நெற்றி அழகின்றிப் பாழாகும். நெய்யில்லாத உணவு ருசியின்றிப பாழாகும். ஆறில்லாத ஊர் செழிப்பின்றிப் பாழாகும். உடன்பிறந்தார் இல்லாத பிள்ளை கண்டிப்பின்றிப் பாழாகும். மனைவி இல்லாத மனை பராமரிப்பின்றிப் பாழாகும்.

25. ஆன முதலில் அதிகம் செலவானான்

மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புத் தீயனாய்

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.

பேராசை கொண்டு பெரும் பொருள் செலவழிப்பவன் மானமும், மதியும் கெட்டு, பிறர் பொருள் கரந்து, ஏழு பிறவியிலும் திருந்தாமல், நன்மை செய்வாருக்கும் பொல்லாதவனாக ஆவான். சிக்கனமே சிறந்த வாழ்க்கைமுறை.

26. மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை-தேனின்

கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்

பசிவந் திடப்பறந்து போம்.

மானிடருக்கே உரிய பத்துச் சிறப்பியல்புகளான மானம், குலப் பண்பு, கல்வி, ஈகை, அறிவு, தானம், தவம், உயர்ச்சி, விடாமுயற்சி, காதல் எல்லாமும் பசி வந்தால் பறந்தோடி விடும்.