திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30

 27. ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்டு ஒன்றாகும்

அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை

நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்

எனையாளும் ஈசன் செயல்.

கடவுளின் கணக்கிற்கேற்ப, ஒரு விஷயம் வேண்டுமென நினைத்தால் இன்னொன்று கிட்டும், இல்லையென்றால் அதுவே கிட்டும், அதுவும் இல்லையென்றால் நினைத்தே பார்க்காத வேறொன்று கூட கிட்டும். எல்லாம் இறைவன் செயல்.

28. உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்

எண்பது கோடிநினைந்து எண்ணுவன-கண்புதைந்த

மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

சாந்துணையும் சஞ்சலமே தான்.

உண்பதென்னவோ ஒருபிடி சோறு, உடுப்பது நான்கே முழத் துணி. ஆனால் மனதில் எப்போதும் மாளாத எண்ணங்கள். அருட்பார்வை அற்ற மனிதர்களின் வாழ்க்கை மண்பானை போல, மரிக்கும் வரை மனதில் துயரமே நிறைந்திருக்கும்.

29. மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி

இரந்தழைப்பார் யாவரும் அங்கில்லை-சுரந்தமுதம்

கன்றுஆ தரல்போல் கரவாது அளிப்பரேல்

உற்றார் உலகத் தவர்.

பழுத்த கனியைப் புசியென்று பறவைகளை மரம் அழைப்பதில்லை. மடி சுரக்கும் பாலை அருந்தென்று மாடு தன் கன்றைக் கூப்பிடுவதில்லை. கொண்ட செல்வத்தை மறைக்காது மற்றவர்களுக்கு அள்ளி வழங்கும் எவரும் உலகத்தாருக்கு உற்றாரே.

30. தாந்தாமுன் செய்தவினை தாமே அநுபவிப்பார்

பூந்தா மரையோன் பொறிவழியே-வேந்தே

ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா

வெறுத்தாலும் போமோ விதி.

பிரம்மன் எழுதியபடி வந்த வினைப் பயனை அவரவரே அனுபவிக்க வேண்டும். அரசனே பரிசளித்துப் புகழ்ந்தாலும் ஊரே கூடி வெறுக்கும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14