ஆத்திசூடி - ஔவையார் - 14-25
ஆத்திசூடி - ஔவையார் - 13ஆம் நூற்றாண்டு நீதிநூல்
நவீனப் பொழிப்புரை
கண்டொன்று சொல்லேல்
நீ கண்ணால் கண்டதை மட்டும் வைத்து எந்த விஷயத்தைப் பற்றியும் கருத்து சொல்லாதே. தீர விசாரித்த பின்னரே எதைப் பற்றியும் தெளிவு பெற வேண்டும்.
ஙப் போல் வளை
ங என்பது தானியத்தை அளக்கும் மரக்கால் (அ) குறுணியைக் குறிக்கும் எழுத்து வடிவம். கொள்ளளவைக் குறிக்கும் இந்த எழுத்து போல, நீ கற்கும் விஷயங்களை உன்னுள் சேகரித்து வைத்திரு.
சனி நீராடு
சனி என்றால் குளிர் (அ) குளிர்ந்த. குளிர்ந்த நீரில் நீராடு.
ஞயம்பட உரை
மேன்மையான விஷயங்களையே எப்போதும் பேசு.
இடம்பட வீடு எடேல்
உனக்குப் பொருந்தாத ஒரு வசிப்பிடத்தைத் தேர்ந்தெடுக்காதே.
இணக்கமறிந்து இணங்கு
உன்னிடம் நட்பு பாராட்டுபவர்களுடன் மட்டும் நட்பாக இரு. உன்னைப் பிடிக்காதவர்களுடன் பழகாதே.
தந்தை தாய் பேண்
தந்தையையும் தாயையும் பேண மறவாதே.
நன்றி மறவேல்
உனக்குச் செய்யப்பட்ட உதவியை என்றும் மறவாதே.
பருவத்தே பயிர் செய்
எதைச் செய்தாலும் அதற்குரிய பருவத்தில் செய்தால்தான் சிறப்பாக இருக்கும்.
மண் பறித்து உண்ணேல்
எத்தகைய வறட்சி வந்தாலும், மண்ணில் பதித்த விதையைப் பறித்து உண்ணாதே.
இயல்பலாதன செய்யேல்
எது இயல்பானதோ அதைத் தவிர்த்து இயற்கைக்கு மாறாக எதையும் செய்யாதே.
அரவம் ஆட்டேல்
அரவம், அதாவது பாம்பு (அ) பிரச்சினை. நீயாகச் சிக்கலைத் தேடிச் செல்லாதே. வம்புகளில் இருந்து ஒதுங்கி இரு.