ஆத்திசூடி - ஔவையார் - 26-40
ஆத்திசூடி - ஔவையார் - 13ஆம் நூற்றாண்டு நீதிநூல்
நவீனப் பொழிப்புரை
இலவம் பஞ்சில் துயில்
வெறும் தரையில் உறங்காதே. இலவம் பஞ்சால் ஆன படுக்கையில் உறங்கினால் உஷ்ணம், குளிர்ச்சி இரண்டும் சமநிலையில் இருக்கும்.
வஞ்சகம் பேசேல்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதே. மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசு.
அழகலாதன செய்யேல்
எதையும் ரசனையுடனும் அழகுணர்ச்சியுடனும் செய்து பழகு. ஏனோதானோ என்று செய்யாதே.
இளமையில் கல்
இளமையிலேயே உனக்குள்ள திறமையை வெளிக்கொண்டு வா. கல்லுதல் என்றால் அகழ்தல் என்றும் பொருள் உண்டு.
அறனை மறவேல்
தானமளிக்க மறக்காதே.
அனந்தல் ஆடேல்
போதை தரக்கூடிய வஸ்துகளைப் பயன்படுத்தாதே. அப்படிப் பயன்படுத்தினால் அவை உன்னை மீறி ஆட வைத்துவிடும்.
கடிவது மற
கடி என்றால் மிகுதி என்று பொருள். உனக்குத் தேவையானதை மட்டும் பெற நினை. மிகுதியாக எதையும் பெற நினைக்காதே.
காப்பது விரதம்
உண்ணா விரதமிருப்பது உயிரைக் காக்கும். விரதமிருந்தால் உடல்நோய் சீக்கிரம் குணமாகும்.
கிழமை பட வாழ்
பெருமை எய்தி வாழ். கிழமை என்றால் மாட்சிமை என்றும் பொருள் உண்டு.
கீழ்மை அகற்று
கீழான எதையும் அகற்று. குணத்தில், நலத்தில், பொருளில் கீழான எதையும் உடன் சேர்க்காதே.
குணமது கைவிடேல்
கொள்கை ஒன்றிருந்தால் அதை ஒருபோதும் கைவிடாதே.
கூடிப் பிரியேல்
கொண்ட நட்பை நீயாக உடைக்காதே. கூடாநட்பை நீயாகச் சேர்க்காதே.
கெடுப்பது ஒழி
நன்றாக இருக்கும் எதையும் நீயாகக் கெடுக்காதே.
கேள்வி முயல்
எதையும் கேள்வி கேட்டுப் பழகு. அப்படியே ஏற்றுக் கொள்ளாதே.
கைவினை கரவேல்
உனக்குத் தெரிந்த தொழிலை வெளிப்படுத்தினால்தான் உனக்கு நற்பெயர் கிட்டும். ஆகவே அதை மறைக்காதே.