ஆத்திசூடி - ஔவையார் - 41-50
ஆத்திசூடி - ஔவையார் - 13ஆம் நூற்றாண்டு நீதிநூல்
நவீனப் பொழிப்புரை
கொள்ளை விரும்பேல்
ஒரு பயனை எதிர்பார்த்து எதையும் செய்யாதே. கொள்ளை என்றால் பயன் என்று ஒரு பொருள் உண்டு.
கோதாட்டொழி
மனதிற்குள் வஞ்சம் வைத்துச் செயல்படாதே. எதிலும் நேர்மையோடு செயல்படு.
கௌவை (கவ்வை) அகற்று
பொறாமை அகற்று. எவர் மீதும், எதன் மீதும் பொறாமை கொள்ளாதே.
சக்கர நெறி நில்
விதி வகுத்த வழியை எப்போதும் பின்பற்று. விதி மீறி எதையும் செய்யாதே.
சான்றோர் இனத்திரு
சான்றோர்களின் கூட்டத்தில் ஒருவனாக இரு. வீணர்களின் கூட்டத்தில் கலவாதே.
சித்திரம் பேசேல்
தந்திரப் பேச்சு பேசாதே. எப்போதும் அலங்காரங்களின்றி, வெளிப்படையாகப் பேசு.
சீர்மை மறவேல்
குடி புகழ் மறக்காதே. நீ பிறந்த குடியின் மேன்மையை, சிறப்பை ஒருபோதும் மறக்காதே.
சுளிக்கச் சொல்லேல்
பிறர் மனம் வந்தும் விதத்தில் எதையும் சொல்லாதே. இனிமையாகப் பேசிப் பழகு.
சூது விரும்பேல்
மூன்று பாவங்களில் ஒன்றான சூதை ஒருபோதும் விரும்பாதே.
செய்வன திருந்தச் செய்
எதைச் செய்தாலும் அதை நேர்த்தியாக, ரசனையுடன் செய்.