ஆத்திசூடி - ஔவையார் - 76-85
ஆத்திசூடி - ஔவையார் - 13ஆம் நூற்றாண்டு நீதிநூல்
நவீனப் பொழிப்புரை
நோய்க்கு இடம் கொடேல்
நோய் என்றால் அச்சம் என்று பொருள். உன் வாழ்க்கையில் அச்சத்திற்கு இடம் தராதே. எதையும் தைரியமாக எதிர்கொள்.
பழிப்பன பகரேல்
ஒன்றுக்கும் உதவாத சொற்களைப் பேசாதே. பேசினால் பிறரால் இகழப்படுவாய்.
பாம்பொடு பழகேல்
காரியம் சாதிப்பதற்காக மட்டும் உன்னைப் பயன்படுத்த நினைப்பவர்களுடன் பழகாதே. பாம்புக்கு இரை மட்டுமே குறி. சுயநலமிகளுக்கு தன்னலம் மட்டுமே இலக்கு.
பிழைபடச் சொல்லேல்
சொல்ல வந்ததைத் தெளிவாக, சுருக்கமாகச் சொல். பொருள் மாற்றிச் சொல்லாதே.
பீடு பெற நில்
சபையின் முன்னால் கைதட்டுபவனாக இருக்காதே. பாராட்டப்படுபவனாக இரு.
புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
உலகம் புகழும் சான்றோரை நீயும் அடியொற்றி வாழக் கற்றுக் கொள். சான்றோர் சொல் தவறாதே.
பூமி திருத்தியுண்
உழவு செய்து உண்டு வாழ்.
பெரியாரைத் துணைகொள்
வாழ்வில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அனுபவம் வாய்ந்தவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடு. தன்னிச்சையாக, அவசரத்தில் முடிவெடுக்காதே.
பேதைமை அகற்று
கல்வி கற்றுக் கொள். கல்லாமல் நில்லாதே.
பையலோடு இணங்கேல்
சிறுமதியாளர்களுடன் சேர்க்கை வைத்துக் கொள்ளாதே. அறிவுடையோருடன் பழகு.
பொருள்தனைப் போற்றி வாழ்
நீ சம்பாதிக்கும் பொருளை ஆடம்பரமாகச் செலவழிக்காதே. சேமித்து வாழக் கற்றுக் கொள்.