ஆத்திசூடி - ஔவையார் - 86-100
ஆத்திசூடி - ஔவையார் - 13ஆம் நூற்றாண்டு நீதிநூல்
நவீனப் பொழிப்புரை
போர்த்தொழில் புரியேல்
பிறர் மீது வன்முறை செலுத்துவதைத் தொழிலாகக் கொள்ளாதே.
மனம் தடுமாறேல்
நிலையான மனம் கொள். குழப்பத்தில் தடுமாறாதே.
மாற்றானுக்கு இடம் கொடேல்
உன் வாழ்க்கையின் முடிவுகளைப் பிறர் எடுக்க அனுமதிக்காதே. உன் வாழ்க்கை உன் கையில்.
மிகைபடச் சொல்லேல்
நீ செய்தவற்றைப் பெருமைபடுத்திச் சொல்லாதே.
மீதூண் விரும்பேல்
அதிகம் உண்ணாதே. அரை வயிறுக்கு உண்.
முனைமுகத்து நில்லேல்
முன்கோபம் கொண்டு உடனடியாக எதிர்வினை ஆற்றாதே. பொறுமையைக் கடைபிடி.
மூர்க்கரோடு இணங்கேல்
முரடர்களோடு பழகாதே. அவருக்குப் பயந்து நடக்காதே.
மெல்லினலாள் தோள் சேர்
நற்பண்புடைய பெண்ணுடன் வாழ்.
மேன்மக்கள் சொற்கேள்
சான்றோர் பேச்சைக் கேள்.
மைவிழியார் மனையகல்
பசப்பு மொழிகள் பேசும் பெண்டிரோடு சேராதே.
மொழிவது அறமொழி
சொல்வதை அழுந்தந்திருத்தமாகச் சொல்.
மோகத்தை முனி
புறவுலக ஆசைகளின் மீது கவனம் வைக்காதே. முனி என்றால் ஒதுக்குதல் என்று பொருள்.
வல்லமை பேசேல்
வாய்ச் சவடால் விடாதே.
வாது முற்கூறேல்
உன்னுடைய வாதங்களை முதலில் எடுத்து வைக்காதே. எதிரியின் வாதங்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப் பழகு.
வித்தை விரும்பு
கல்வி கற்க விரும்பு.