மூதுரை - ஔவையார் - 1 -5
மூதுரை - ஔவையார் - 12ஆம் நூற்றாண்டு நீதி நூல்
கடவுள் வாழ்த்து
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
வேழமுகக் கடவுளின் விரிந்த பாதங்களைத் தினந்தோறும் தொழு. அந்தச் செம்மேனியானைப் மலர்கள் கொண்டு அர்ச்சிப்போருக்கு நல்ல வாக்குவன்மையும், மனத் திண்மையும், மலரவள் அருளும், உடல்நலமும் வளமும் கிட்டும்.
*****
1. நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தரும்கொல் எனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.
நீ செய்த உதவிக்கு ஒருவர் எப்போது கைமாறு செய்வார் என எதிர்பார்க்காதே. தன் காலடியில் நீரைக் குனியாது உறிஞ்சி, தலையில் இளநீராகத் தரும் தென்னையைப் போல கொடையைப் பலன் எதிர்பார்க்காமல் செய்.
*****
2. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்து போல் காணுமே-அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர்.
நற்குணமுடைய ஒருவருக்குச் செய்த உதவி என்பது கல் மேல் எழுத்து போல அவர் மனதில் நன்றியாக நீடித்து நிலைக்கும். வஞ்சக மனம் கொண்டோருக்கு செய்த கைமாறு நீர் மேல் எழுத்து போல அக்கணமே அவர் மனதிலிருந்து அகன்றுவிடும்.
*****
3. இன்னா இளமை வறுமை வந்தெய்தியகால்
இன்னா அளவில் இனியவும்-இன்னாத
நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக்கு அழகு.
இளமையில் வறுமையால் கிடைக்காத, முதுமையில் கிடைத்தும் ருசிக்க முடியாத இன்பம், காலமில்லாக் காலத்தில் பூத்த மலரையும், கண்டு ரசிக்கக் கட்டழகன் இல்லாத கன்னியையும் போல பயனற்றது.
*****
4. அட்டாலும் பால்சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
சுண்டக் காய்ந்தாலும் பால் சுவை குன்றாது. நன்கு பழகினாலும் சுயநலமிகள் நல்ல நண்பர்கள் ஆகார். வெண்சங்கைத் தீயில் சுட்டாலும் வெண்மையையே வெளிப்படுத்துவது போல மேலோர் நிலை கெடினும் குணத்தில் மேலோரே.
*****
5. அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.
என்னதான் முயன்றாலும் உரிய நேரம் வராமல் காரியம் நடக்காது. மரம் நெடுநெடுவென வளர்ந்தாலும் பருவம் வந்தால்தான் பழம் பழுக்கும்.
*****