மூதுரை - ஔவையார் - 11 -15


மூதுரை - ஔவையார் - 12ஆம் நூற்றாண்டு நீதி நூல்

11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்

விண்டுஉமி போனால் முளையாதாம்-கொண்டபேர்

ஆற்றலுடையார்க்கும் ஆகாது அளவின்றி

ஏற்ற கருமம் செயல்.

முழு நெல்லில் முளைக்கும் பயிர் முனை உடைந்து உமி போனால் விளையாது. அதேபோல், பேராற்றல் உள்ளவரும் கணக்கன்றிக் காரியங்களைச் செய்து முடிக்க முடியாது. எண்ணித் துணிகக் கருமம்.

*****

12. மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்

உடல்சிறியர் என்றிருக்க வேண்டா-கடல்பெரிது

மண்ணீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்

உண்ணீரும் ஆகி விடும்.

தாழை மலரை விட அதன் மடல் பெரிதானது. கடல் விரிந்தது, ஆனால் அதன் நீர் அருந்த முடியாதது. அளவு சிறியதானாலும் தாழம்பூவின் வாசமும், கடற்கரை ஊற்று நீரும் சுவையும் ரசித்து மகிழத்தக்கவை. அளவைக் கண்டு பயனை எடை போடாதே.

*****

13. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள்-சபைநடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டா தவன்நல் மரம்.

வனத்தில் வானெடுக வளர்ந்து நிற்பவை மட்டும் மரங்களல்ல. சபை நடுவே சுவடியைப் படிக்க முடியாமல், அதைக் குறிப்பிட்டு பிறர் இகழும்போதும் அதை உணராதவனும் கூட நல்ல மரம்தான். கல்வி கல்லாதான் நுண்பொருள் உணராதான்.

*****

14. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்துத்-தானும்தன்

பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி.

மயிலின் தோகையழகைக் கண்டு தானும் ஆடிய வான்கோழிக்குக் கிடைக்கும் ஏளனத்தைப் போலவேயாம் கல்லாதவனின் கவிக்குக் கிடைக்கும் கைதட்டல். போலிப் பண்டிதன் கேலிப் பொருளாவான்.

*****

15. வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி

ஆங்குஅதனுக்கு ஆகாரம் ஆனாற்போல்-பாங்கறியாப்

புல்லறி வாளருக்குச் செய்த உபகாரம்

கல்லின்மேல் இட்ட கலம்.

கொடும் புலியின் வலிதீர்த்த விஷ வைத்தியன் அதன் பசிக்கு இரையானது போல, மாண்பறியா மதியீனருக்குச் செய்த உதவி பாறை மேல் போட்டுடைத்த பானை போல வீணாகும்.

*****

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30