கொன்றைவேந்தன் - ஔவையார் - 11 - 20
கொன்றைவேந்தன்
ஔவையார் எழுதிய 12ஆம் நூற்றாண்டு நீதிநூல்
நவீனப் பொழிப்புரை
ஓதலின் நன்றே வேதியர் ஒழுக்கம்
ஜப, தவங்களைக் காட்டிலும் ஒழுக்கத்துடன் வாழ்வதே சான்றோருக்குப் பணி. ஒழுக்கம் பேணி வாழ்வோரே உயர்ந்தவர்.
ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
பிறரை வீழ்த்த சூழ்ச்சி செய்வது அழிவைத் தரும். கேடு நினைப்பவன் கெடுவான்.
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
விளைபயிரையும், பொன் பொருளையும் கவனமாகப் பார்த்துக் கொள். பயிரும், பொன்னும் பாதுகாத்து வை.
கற்பென்பது சொல் திறம்பாமை
கொடுத்த வாக்குறுதியை எந்நாளும் கைவிடலாகாது. சொன்ன சொல்லை மீறி நடக்கக்கூடாது.
காவற்றானே பாவையர்க்கு அழகு
மேனி மெலிதலே பெண்டிருக்கு அழகு சேர்க்கும். உண்ணா நோன்பு மகளிர்க்கு மாண்பு.
கிட்டாதாயின் வெட்டென மற
கிடைக்காத ஒன்றை நினைத்து ஏங்காதே. அதை உடனே மறந்துவிடு.
கீழோராயினும் தாழ உரை
உன்னிலும் எளியவரானாலும் அவர்களிடமும் பணிவாகப் பேசு. எல்லோரிடமும் பணிவாய் இரு.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
குறை கண்டுபிடித்தவாறே இருந்தால் உறவு விட்டுப் போகும். உற்றாரிடம் உரசல் கொள்ளாதே.
கெடுவது செய்யின் விடுவது கருமம்
தீய செயலைச் செய்தால் தீமையே விளையும். பொல்லாததைச் செய்யாமல் இருப்பதே நன்று.