மூதுரை - ஔவையார் - 16 -20


மூதுரை - ஔவையார் - 12ஆம் நூற்றாண்டு நீதி நூல்

16. அடக்கம் உடையார் அறிவிலர்என்று எண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா-மடைத்தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு.

தோற்றத்தைப் பார்த்துத் தேற மாட்டார் என்று எண்ணாதே. மடைத்திறப்பில் கொழுமீன் வரும் வரை கல் என நின்று கொத்தித் தின்னும் கொக்கின் அமைதியும் அஃதே.

*****

17. அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல

உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி யுறுவார் உறவு.

குளம் வற்றினால் பறந்தோடிப் போகும் நீர்ப்பறவைகள் போல அல்லாது, அதிலேயே முகையாகவும், முகிழாகவும் புதைந்தே இருக்கும் கொடியும், மலரும், மீனும் போன்றோரே உற்றார். சூழ்ந்து பிழைப்போர் சுற்றம் ஆகார்.

*****

18. சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்

றல்லாதார் கெட்டால்அங்கு என்னாகும்-சீரிய

பொன்னின் குடமுடைந்தால் பொன்னாகும் என்னா

மண்ணின் குடமுடைந்தக் கால்.

குணத்தின் மேலோர் வளத்தில் குறைந்தாலும் மேலோரே. பொன்னாலான குடம் உடைந்தாலும் மதிப்புதான், மண்ணாலான குடம் உடைந்தால் வெறும் மண்தான். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

*****

19. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

நாழி முகவாது நால்நாழி-தோழி

நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்

விதியின் பயனே பயன்.

முயன்றாலும் வாளியில் ஆழிநீரை அடக்க முடியாது. மணவாளனும், மனை மங்கலமும் பெண்ணின் விதிப்பயன் படியே அமையும்.

*****

20. உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா

உடன்பிறந்தே கொல்லும் வியாதி-உடன்பிறவா

மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்

அம்மருந்து போல்வாரும் உண்டு.

உடலுக்குள் முளைக்கும் நோயே அதைக் கொல்லும். ஆனால் நோய் தீர்க்கும் மருந்துள்ள மலைக்கும் உடலுக்கும் உறவேதும் இல்லை. சுற்றம் எல்லாம் சுகம் தரும் என்றோ, வெளியார் எல்லாம் வெறுப்பவர் என்றோ பொருள் அல்ல.

*****

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30