மூதுரை - ஔவையார் - 21 -25


மூதுரை - ஔவையார் - 12ஆம் நூற்றாண்டு நீதி நூல்

21. இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே யாம்ஆயின்-இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலிகிடந்த தூறாய் விடும்.

நற்றுணைவி மனையிருக்க மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. துணைவனைச் சொற்களால் சுடும் மனைவி இருக்கும் வீடு வேங்கை உலவும் புல்காடு போன்றது, அது வசித்திருக்க உகந்ததன்று.

*****

22. எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம்-கருதிப்போய்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்ததேல்
முற்பவத்திற் செய்த வினை.

விதிப்படி கிடைப்பதுதான் கிடைக்கும் மூட மனமே. நினைப்பதெல்லாம் கிடைக்கும் என்றெண்ணி கற்பக மரத்திடம் சென்று இரந்தவருக்கு, முற்பிறவிப் பலனின்படி எட்டிக்காய்தான் கிடைக்கும் என்றால் அதை யாரால் மாற்ற முடியும்?

*****

23. கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே-வில்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்.

சாதாரணர்களின் கோபம் கல்லில் பிளவு போல உறவை உதறிச் செல்லும். அறிவாரின் சினம் பொன்னில் விளைந்த பிளவு போல கூடும் சாத்தியமுள்ளது. அது நீரைக் கிழித்த அம்பின் தடம் மறைவது போல அப்போதே நீங்கிவிடும்.

*****

24. நற்றா மரைக்கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.

தாமரைக் குளத்தில் அன்னம் விரும்பி உலாவுதல் போல கற்றோரை கற்றோரே நாடிச் செல்வர். காட்டிடை கிடைக்கும் பிணத்தை உவக்கும் காக்கை போல முரடரை முரடரே தேடிச் செல்வர்.

*****

25. நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறம்கிடக்கும் நீர்ப்பாம்பு-நெஞ்சிற்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.

விஷமுள்ள நாகம் தன்னை மறைத்து வாழும். விஷமில்லா தண்ணீர்பாம்பு அஞ்சாமல் கரை திரியும். மனதில் நஞ்சுடையவர் அதனை மறைத்தே பேசுவார், வஞ்சனை இல்லாதவர் வெளிப்படையாக இருப்பார்.

*****

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30