மூதுரை - ஔவையார் - 26 -30

 

மூதுரை - ஔவையார் - 12ஆம் நூற்றாண்டு நீதி நூல்


26. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனில் கற்றோன் சிறப்புடையன்-மன்னர்க்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்றஇடம் எல்லாம் சிறப்பு.


அரசனையும் அறிவார்ந்த ஒருவரையும் ஒப்பிட்டால் சான்றோனே சிறந்தவன். ராஜனுக்கு அவன் ராஜ்ஜியத்தில் மட்டுமே மதிப்பு, அறிஞனுக்கு அகிலமெல்லாம் சிறப்பு.


*****


27. கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார்சொல் கூற்றம்

அல்லாத மாந்தர்க்கு அறம்கூற்றம்-மெல்லிய

வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம் கூற்றமே

இல்லிற்கு இசைந்தொழுகாப் பெண்.


அறிவாளியின் அறிவுரை அறிவிலிக்குப் படிப்பினை தரும். அறமற்ற மூடருக்கு அந்த அறமே பாடம் புகட்டும். வலுவற்ற வாழையை அதன் காய்களே எடைமிகுந்து முறிப்பது போல, கணவனுடன் இசைந்து போகாத பெண் மனைக்கு மங்கலம் சேர்க்க மாட்டாள்.


*****


28. சந்தன மென்குறடு தாந்தேய்ந்த காலத்தும்

கந்தம்குறை படாது ஆதலால்-தம்தம்

தனம் சிறியராயினும் தார்வேந்தர் கேட்டால்

மனம் சிறியராவரோ மற்று


பலகாலம் பயன்படுத்திய சந்தனக் கட்டை தேய்ந்தாலும் அதன் மணம் மங்குவதில்லை; ஈகை குணமுடைய செல்வந்தர்களின் பணம் தேய்ந்தாலும் அவரிடம் இரந்து நிற்பவருக்கு மறுப்புச் சொல்ல மாட்டார்கள்.


*****


29. மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல

உருவும் உயர்குலமும் எல்லாம்-திருமடந்தை

ஆம்போது அவளோடும் ஆகும்-அவள்பிரிந்து

போம்போது அவளோடும் போம்.


ஒருவனின் விதியில் திருமகள் துணையிருக்கும்போது சூழ்சுற்றமும், செல்வமும், அழகும், குலமும் பொலிந்து நிற்கும். திருமகள் அருள் விலகிவிட்டால் அவை அனைத்தும் அவளுடனே சேர்ந்து விலகிவிடும்.


*****


30. சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை

ஆந்தனையும் காப்போர் அறிவுடையோர்-மாந்தர்

குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து

மறைக்குமாம் கண்டீர் மரம்.


தன்னை வெட்டி வீழ்த்துபவனுக்கும் குளிர்நிழல் தந்து காக்கும் மரம் போல, தம் உயிருக்கு உலை வைக்கும் செயலைச் செய்த தீயவனுக்கும் தன்னால் இயன்ற உதவியைச் செய்துவிடுவார் சான்றோர்.


*****


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30