கொன்றைவேந்தன் - ஔவையார் - 21 - 30
கொன்றைவேந்தன்
ஔவையார் எழுதிய 12ஆம் நூற்றாண்டு நீதிநூல்
நவீனப் பொழிப்புரை
கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
உடலில், உறவில் கேடு உண்டாகும்போது, சேர்த்து வைத்த செல்வம் கைகொடுக்கும். கஷ்டகாலத்திற்குக் காசைச் சேர்.
கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
செல்வத்தைக் காட்டிலும் மேலானது கல்வி. கல்வி இருப்பின் செல்வம் சேரும்.
கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
சமூகத்தில் பலம் வாய்ந்த ஒருவரோடு நட்பு பாராட்டுவது நன்மை பயக்கும். வலியோர் நட்பு வலிமை கூட்டும்.
கோட் செவிக்குறளை காற்றுடன் நெருப்பு
வம்பு பேசுபவரிடம் சொல்லும் செய்தி காற்றுடன் சேர்ந்த நெருப்பைப் போலப் பல்கிப் பரவும். புறம் பேசுபவரிடம் நீ பேசாதே.
கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை
பிறரைத் தூற்றினால் உனக்கும் பகை வந்து சேரும். பழிச்சொல் தனக்கே அழிவைத் தரும்.
சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
பெற்றோருக்கு அடங்கி நடப்பதே பிள்ளைக்கு அழகு. தாய், தந்தை தாள் பணி.
சான்றோர் என்கை ஈன்றோளுக்கு அழகு
தன் மகவைச் அறிஞன் எனப் பிறர் கூறக் கேட்பதே அன்னைக்குப் பெருமை. சான்றோன் எனக் கேட்டலே தாய்க்கு மகிழ்வு.
சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு
சஞ்சலமில்லா மனதைக் கைகொள்வதே தவசிக்கு இலக்கு. மோன நிலையே ஞான நிலை.
சீரைத் தேடின் ஏரைத் தேடு
செல்வம் வேண்டின் ஏர்த்தொழில் செய். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்.
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
உறவுகளைப் பேணிக் காக்க வேண்டும். விருந்தில்லா வீடு விழல்.