கொன்றைவேந்தன் - ஔவையார் - 41 - 50
கொன்றைவேந்தன்
ஔவையார் எழுதிய 12ஆம் நூற்றாண்டு நீதிநூல்
நவீனப் பொழிப்புரை
துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
துணைவனுக்கு இடர் வரும்போது பதறாத பெண்கள் துயரத்தைத் தருவார்கள். அன்பிலாப் பெண்டிர் அழிவை ஒப்பர்.
தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்
மனையானோடு சண்டையிடும் மங்கையர் மரணத்திற்கு ஒப்பாவார்கள். நாவடக்கிப் பேசாதவள் நரகத்தைத் தருவாள்.
தெய்வம் சீறின் கைதவம் ஆளும்
இறையருள் இல்லையெனில் துயர் வந்து அணையும். ஆண்டவன் அருளை அனுதினமும் நாடு.
தேடாது அழிக்கின் பாடா முடியும்
உழைக்காமல் உட்கார்ந்து தின்பவனின் நிலை வீணில் முடியும். உழைக்காமல் பிழைக்காதே.
தையும் மாசியும் வையகத்து உறங்கு
கூதல் காலத்தில் கூரையின் கீழ் படுத்துறங்கு. வெட்டவெளியில் படுத்தால் பனி வந்து சேரும்.
தொழுதூண் சுவையினும் உழுதூண் இனிது
அண்டிப் பிழைத்து உண்பதை விட உழுது உழைத்து உண்பதே மேலானது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்.
தோழனோடும் ஏழைமை பேசேல்
உன் வறுமையைப் பற்றி நெருங்கிய நட்புடன் கூட பேசாதே. ஏற்பது இகழ்ச்சி.
நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும்
தீயோர் நட்பு பாடாய் படுத்தும். கூடா நட்பு கேடாய் முடியும்.
நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை
இல்லாதவருக்கு யாதும் ஊரே. எங்கும் வாழ இறையருள் உண்டு.
நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை
ஆழ்ந்து கற்றோர் வீண் சொல் பேச மாட்டார்கள். சான்றோர் வாக்கு ஊன்றி நிற்கும்.