கொன்றைவேந்தன் - ஔவையார் - 51 - 60


கொன்றைவேந்தன்

ஔவையார் எழுதிய 12ஆம் நூற்றாண்டு நீதிநூல்

நவீனப் பொழிப்புரை

நீரகம் பொருந்திய ஊரகத்து இரு

நீர்வளம் நிரம்பிய ஊரில் வசித்திரு. நீரின்றி அமையாது உலகு.

நுண்ணிய கருமமும் எண்ணித் துணி

சிறிய பணியானாலும் சிந்தித்து செய். நுட்பமாகத் திட்டமிட்டுச் செயலில் இறங்கு.

நூன்முறை தெரிந்து சீலத்து ஒழுகு

மூத்தோர் முதுமொழியைப் படித்து நட. நன்நூல் வழி நீதி ஒழுகு.

நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை

நீ செய்யும் வஞ்சகத்தை யார் அறியாமல் போனாலும் உன் மனசாட்சி அறியும். தன் நெஞ்சத்தை விட நியாயமான நீதிபதி இல்லை.

நேரா நோன்பு சீரா காது

நேர்மையற்ற நோக்கம் நிறைவேறாது. பிறருக்குத் தீங்கிழைக்கும் திட்டம் தனக்கும் தீமையையே தரும். 

நைபவர் ஆயினும் நொய்ய உரையேல்

வறியவராயினும் வசை உரைக்காதே. உன்னை விட எளியோரிடமும் இதமாகப் பேசு.

நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்

பசித்திருப்பவன் நெருப்புக்குச் சமமானவன். நீ அறிய எவரையும் பசித்திருக்க விடாதே.

நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை

புலால் புசிக்காமல் இருப்பதே உண்மையான நோன்பாகும். ஊன் உண்ணாததே உண்மையான உண்ணாநோன்பு.

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்

புண்ணியத்தின் அளவு பண்ணிய தானத்தின் அளவை ஒத்திருக்கும். ஐயமிடும் அளவுக்கு அருள் கிட்டும்.

பாலோடு ஆயினும் காலமறிந்து உண்

உனக்குச் சொந்தமானதாக இருந்தாலும் எதையும் நேரம் பார்த்துப் பயன்படுத்து. தேவையின்றி வீணடிக்காதே.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30