மூதுரை - ஔவையார் - 6 -10
மூதுரை - ஔவையார் - 12ஆம் நூற்றாண்டு நீதி நூல்
6. உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ-கல்தூண்
பிளந்திறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.
நட்புக்காக உயிர் தரும் மனத்திண்மை கொண்டவர், பகைவர் முன்னால் பணியார். பெரும் பாரம் தாங்காத கல்தூண் உடையுமே அன்றி ஒருபோதும் வளையாது.
*****
7. நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு-மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகும் குணம்.
அல்லியின் உயரம் வெள்ளத்தளவு. ஆழ்ந்து கற்கும் நூலளவே கூரறிவு. செல்வம் முற்பிறவியில் செய்த நல்வினையளவு. வாய்த்த குடும்பத்தின் வளர்ப்பளவே குணம்.
*****
8. நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.
நற்குணத்தோரைப் பார்ப்பதும், அவர் சொல் கேட்பதும், அவரைப் பற்றிப் பிறரிடம் புகழ்ந்துரைப்பதும், அவருடன் பழகி மகிழ்வதும் என்றும் நன்று.
*****
9. தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.
தீயோரைப் பார்ப்பதும், அவரது பொருளற்ற சொல் கேட்பதும், அவரைப் பற்றிப் பிறரிடம் புறம் உரைப்பதும், அவருடன் பழகிக் கெடுவதும் என்றும் தீது.
*****
10. நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டே
எல்லார்க்கும் பெய்யு மழை.
வயலில் பயிருக்குப் பாய்ச்சும் நீர் இடைமுளைத்த புல்லுக்கும் பசி தீர்க்கும். அதே போல் இந்த மூதுலகில் ஒரு புண்ணியவான் இருந்தால் கூட அவருக்காக எல்லோருக்கும் பெய்யுமாம் வான்.
*****