கொன்றைவேந்தன் - ஔவையார் - 71 - 80


கொன்றைவேந்தன்

ஔவையார் எழுதிய 12ஆம் நூற்றாண்டு நீதிநூல்

நவீனப் பொழிப்புரை 

மாரி அல்லது காரியம் இல்லை

மழையின்றி மன்னுலகம் மீளாது. நீரின்றி இவ்வுலகு இல்லை.

மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை

மின்னலுக்குப் பிறகு மழை வரும். இன்னலுக்குப் பிறகு இன்பம் வரும்.

மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது

மாலுமி இல்லாத கப்பல் கவிழ்ந்துவிடும். தலைமை இல்லாத நாடு தத்தளிக்கும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

முற்காலத்தில் செய்த நல்வினையும், தீவினையும் பிற்காலத்தில் திரும்பத் தரும். வினை முன் செய்யின் விளைவு பின் தெரியும்.

மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்

உன்னிலும் சான்றோர் சொன்ன சொற்கள் முதுநெல்லி போன்றவை. பலித்த பின்னே இனிப்பவை.

மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு

வெறும் தரையில் படுத்துறங்காதே. இலவம் பஞ்சு மெத்தையில் துயில்.

மேழிச் செல்வம் கோழை படாது

உழுதுழைத்து ஈட்டிய செல்வம் ஒருபோதும் கைவிடாது. தொழிலில் முதன்மை உழவே.

மைவிழியார் தம் மனை அகன்றொழுகு

பொய் மொழி பேசும் பெண்டிரை அண்ட விடாதே. வஞ்ச நெஞ்சம் கொண்ட வஞ்சியரை விட்டகல்.

மொழிவது மறுக்கின் அழிவது கருமம்

அறிவார் அறிவுரையை மீறினால் அழிவு உறுதி. மூத்தோர் சொல் மிக்க மந்திரம் இல்லை.

மோனம் என்பது ஞான வரம்பு

முழு மௌனமே ஞானத்தின் உச்சம். மோன நிலையே தியான நிலை. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30