திருமூல ஔவையார் பாடிய நல்வழி - நீதிநூல்

 

வாழ்த்துப் பா

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன்-கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும்தா.

பாலும், தூய தேனும், வெல்லப் பாகும், துவரைப் பருப்பும் கலந்த பாயசம் உனக்குப் படைப்பேன். அகன்ற, யானை முகத்தை உடைய அழகிய தூய மணியே! சங்கத்தமிழ் மூன்றையும் எனக்கு அருளித் தா.

1. புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாள் செய்தஅவை

மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்

ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லும்

தீதொழிய நன்மை செயல்.

அனைத்துச் சமயமும் பகரும் நீதி ஒன்றே - தீயதைத் தவிர், நன்மையைச் செய். இந்த இரண்டைத் தவிர வேறெதுவும் இந்த மண்ணில் பிறந்தவர்களுக்கு பொருட்டில்லை. தர்மம் தலைகாக்கும். தீமை தலை போக்கும்.

2. சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் 

நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி.

இல்லாதவருக்கு இயன்றதை அளிப்பவர் உயர்ந்தோர், அளிக்காதவர் இழிந்தோர். இயற்கையின் ஒருபோதும் தவறாத நீதித் தராசுப் படி இந்த இரண்டைத் தவிர வேறு சாதிகள் எதுவுமில்லை. 

3. இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே

இடும்பொய்யை மெய்என்று இராதே-இடுங்கடுக

உண்டாயின் உண்டாகும் ஊழிற் பெருவலிநோய்

விண்டாரைக் கொண்டாடும் வீடு.

யாக்கை என்பது உன்னுயிரைத் தாங்கி நிற்கும் பை தானே? இந்தப் பொய்யை மெய் என்று எண்ணி இறுமாந்து இருக்காதே. விதிவசத்தால்  பெருவலியைத் தரக்கூடிய நோயிலிருந்து உன்னை விடுவித்து வீடுபேற்றை வழங்கும் அறச் செயல்களை உடனே தொடங்கு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30