வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 11 - 22

 11. பெண்டிர்க்கு அழகுஎதிர் பேசாது இருத்தல்

       மௌன மொழி பேசுதல் மகளிர்க்கு அழகு.

12. குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல்

      மணாளனைச் சீராட்டல் மங்கையர்க்கு அழகு.

13. விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல்

      வனப்பைப் பேணுதல் வடிவஞ்சியருக்கு அழகு.

14. அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்

      நிறைகுடம் தளும்பாதிருத்தல் நிறைஞருக்கு அழகு.

15. வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை

      நெறியுடன் வாழ்தல் வறியவருக்கு அழகு.

16. தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை

      வானுற ஓங்கி வளம்பெற வளரினும்

      ஒருவர்க்கு இருக்க நிழலா காதே

     இனிய கனியின் பெரிய விதையிலிருந்து முளைத்து  வானுயர வளர்ந்து நின்றபோதிலும்             பனைமரத்துக்கு அடியில் எவருக்கும் நிழல் கிட்டாதே. 

17. தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை

      தெண்ணீர் கயத்துச் சிறுமீன் சினையினும்

      நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை

      அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு

      மன்னர்க்கு இருக்க நிழலா கும்மே.

      முனையளவு பழத்திலிருந்து நன்னீர் வசிக்கும் மீனின் முட்டையிலும் சிறியதான விதையிலிருந்து      முளைக்கும் ஆலமரம், யானையோடு தேரும், புரவியோடு படையும் மன்னர்கள் இளைப்பாற மடி கொடுக்குமே. 

18. பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்

      ஆதலின் உருவத்தால் பெரியோரெல்லாம் பெரியவர் அல்ல.

19. சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.

      அதேபோல், உருவத்தால் சிறியோரெல்லாம் சிறியவர் அல்ல. 

20. பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்

      பெற்றதனாலேயே எல்லோரும் பிள்ளைகள் ஆகார்.

21. உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்

      சூழ்ந்திருப்பதாலேயே எல்லோரும் சுற்றம் ஆகார்.

22. கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்

      மனம் கவர்ந்த மகளிர் எல்லோரும் மனைவி ஆகார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30