திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 15 - 18

 15. சிவாய நமவென்று சிந்தித்து இருப்போர்க்கு

அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம்

இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்

விதியே மதியாய் விடும்.

தெய்வம் தொழுவோருக்கு ஒருநாளும் இல்லை துன்பம். இவ்வழி செல்லாத எளியவருக்கு விதி விட்டதே கதி.

16. தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால்

கண்ணீர்மை மாறாக் கருணையால்-பெண்ணீர்மை

கற்பழியா ஆற்றலால் கடல்சூழ்ந்த வையகத்துள்

அற்புதமாம் என்றே அறி.

நிலத்தின் தன்மையைத் தேங்கி நிற்கும் நீர் காட்டிவிடும்.  கொடுப்பவரின் குணத்தை கொடையின் திறம் காட்டிவிடும். கருணையின் ஒளியைக் கண்கள் காட்டி விடும். காதலின் ஆழத்தைக் கற்புநிலை காட்டிவிடும்.  இவையனைத்தும் இந்த உலகைச் சூழ் ஆழி ஒருநாளும் கரை மீறாதது போன்ற மாறாத உண்மைகளாம்.

17. செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்

எய்த வருமோ இருநிதியம்-வையத்து

அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று

வெறும்பானை பொங்குமோ மேல்

காலிப் பானையைக் கொதிக்க வைத்தால் அதில் பொங்குமோ பால்? செய்த வினை தீர்க்க செய்ய வேண்டிய தான தருமங்களைத தக்க சமயத்தில் செய்யாது, இப்பிறவியில் சங்கநிதியும், பதுமநிதியும் கை வரவில்லை என தெய்வத்தை நொந்தென்ன பயன்?

18. பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்

உற்றார் உகந்தார் எனவேண்டார்-மற்றோர்

இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே

சரணம் கொடுத்தாலும் தாம்.

பிறருக்கு ஈயாக் கஞ்சர்கள் தங்களைப் பெற்றோருக்கும், உற்றாருக்கும், ஊராருக்கும், காலில் விழுந்தோருக்கும் என யாருக்கும் எதுவும் தர மாட்டார்கள். ஆனால் அவர்களும் தங்களை மிரட்டிப் பறிக்கும் தீயோரிடம் கொடுத்தான் தீர வேண்டியிருக்கும். வீணர் செல்வம் ஈனர் வசமாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30