திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 19 - 22
19. சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்.
அணையாத அனலான வயிற்றுப் பசியை அவிக்க அரைப்படி அரிசிக்காகப் பிறரை கும்பிட்டும், கெஞ்சியும், கடல் கடந்து சென்றும், பசப்பியும், துதி பாடியும் பலவாறு நடித்துப் பிழைக்க வேண்டியிருக்கிறதே?
20. அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்கும்
கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம்-இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.
வடிவமிகு இழிபெண்டிரிடம் இன்பம் தேடுவதென்பது அம்மிக்கல்லைக் கட்டிக் கொண்டு ஆற்றில் இறங்குவதைப் போல, இப்பிறவிக்கும், இனி வரும் பிறவிகளுக்கும் இகழ்ச்சியைச் சேர்க்கும், சேர்த்த செல்வம் தொலைக்க வைத்து வறுமைக்கு வித்திடும்.
21. நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும்-ஊரும்
வரும்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்
செந்தாமரையில் வீற்றிருக்கும் செல்வ லட்சுமி மனதில் வஞ்சமில்லாப் புண்ணியருக்கு உணவும், உறையுள்ளும், நிலமும், பேரும், புகழும், பெருவாழ்வும், ஊர் போற்றும் நற்பெயரையும் அருளிடுவாள்.
22. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்கு
ஆவிதான் போயினபின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகள் அந்தப் பணம்.
இரவும் பகலும் உறங்காது உழைத்து சேர்த்த பணத்தை யாருடனும் பகிராமல் புதைத்து வைக்கும் மனிதர்களே கேளீர்! உடல் விட்டு உயிர் நீங்கிய பின் அந்தப் பணத்தை தீயோர்தான் அனுபவிப்பார்கள். பகிராத செல்வம் பாவிகளுக்குதான் போகும்.