திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 4 - 7


4. எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் யொண்ணாது

புண்ணியம் வந்தெய்து போதல்லால்-கண்ணில்லான்

மாங்காய் விழஎறிந்த மாத்திரைக் கோலொக்குமே

ஆங்காலம் ஆகும் அவர்க்கு.

முன்வினைப் பயனின்றி முயன்றதை எல்லாம் முடித்து விட முடியாது, பார்வையற்றவன் பழம் பறிக்கக் ஊன்கம்பை எறிவது போல புண்ணியம் இருந்தால்தான் காரியம் நடக்கும், இல்லையேல் தனக்கே தீமையுண்டாகும்.

5. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா

பொருந்துவன போமின்என்றால் போகா-இருந்துஏங்கி

நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில்.

விதிவசத்தால் ஒன்று கிடைக்காது என்றால் கிடைக்காது, வந்ததைப் போ என்றாலும் போகாது. இது புரியாது கற்பனையில் கோட்டை கட்டி மனம் நொந்து மாண்டு போவதே மாந்தரின் இயல்பு.

6. உள்ள தொழிய ஒருவர்க்கு ஒருவர்சுகம்

கொள்ளக் கிடையா குவலயத்தில்-வெள்ளக்

கடலோடி மீண்டு கரையேறினால் என்

உடலோடு வாழும் உயிர்க்கு.

இந்த வையகத்தில் ஒருவருடைய சுகதுக்கங்களை மற்றொருவர் வாங்கிக் கொள்ள முடியாது. திரைகடலோடி திரவியம் சேர்த்தாலும் அதனால் உடல் தங்கி நிற்கும் உயிருக்கு என்ன பயன்? அவரவர் ஊழ்வினை அவரவருக்கு.

7. எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு

பொல்லப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்

அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போல்

பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.

என்ன சமாதானம் சொன்னாலும் இந்த உடம்பு  புழுக்களும், நோய்களும் மலிந்திருக்கும் கூடு போன்றது. இதை அறிந்த நல்லோர் தன்னோடும் பிறரோடும் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாதிருப்பார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30