திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 8 - 10
8. ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணும் அகிலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்.
பணம் ஈட்ட எவ்வளவுதான் முயன்றாலும் விதியின் துணையின்றி அது கைகூடாது; பொருள் மூலம் புகழ் தேடும் உலகத்தோரே, ஊழின் நல்வினையின்றி நிலைக்காது செல்வம்.
9. ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும்அந் நாளும்அவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து.
கடுங்கோடையில் நீர் வற்றி கால் பொசுக்கும் ஆற்றுமணலிலும் ஊற்றுநீர் ஊறி உலகோர் தாகம் தீர்க்கும்; ஆங்கே நற்குடியில் பிறந்தோர் செல்வம் குன்றிப் போனாலும் இரப்பவருக்கு இல்லை என மாட்டார்.
10. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்-வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்குஎன் என்றுஇட்டு உண்டிரும்.
உருண்டு புரண்டாலும் மாண்டவர் மீளார் மக்களே; ஆதலால் நாமும் வாழும்வரை காலன் நினைப்பின்றி களித்திருந்து, இல்லாதோருக்கு ஈந்து உண்டு உயிர்த்திருப்போம்.