வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 49 - 57

 49. குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்

நடைமெலிந்து ஓர்ஊர் நண்ணினும் நண்ணுவர்

யானை மீது வெண்கொற்றக் குடையின் கீழ் வலம் வந்த மன்னர்களும் நிலை தாழ்ந்து நடந்தே ஊர் கடந்து போகக்கூடும்.

50. சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்

அறக்கூழ் சாலை அடையினும் அடைவர்

பேரும் பெருமையும் மிக ஊரில் வாழ்ந்தவரும் ஒருவாய்க் கூழுக்காக அன்னசத்திரத்திற்குச் செல்லும் நிலை வரக்கூடும்.

51. அறத்திடு பிச்சை கூவி இரப்போர்

அரசோடு இருந்துஅரசு ஆளினும் ஆளுவர்

முகமன் கூறி மக்களிடம் இரந்து வாழ்ந்தவரும் அரசனோடு அமர்ந்து ஆட்சி செய்யக்கூடும்.

52. குன்றத் தனைஇரு நிதியைப் படைத்தோர்

அன்றைப் பகலே அழியினும் அழிவர்

என்றும் குறையாத சங்க, பதும நிதிகளைச் சேர்த்து வைத்தோரும் ஒரே நாள் பொழுதில் தடமின்றி அழியக்கூடும்.

53. எழுநிலை மாடம் கால்சாய்ந் துக்குக்

கழுதை மேய்பாழ் ஆயினும் ஆகும்

அடுக்குமாட மாளிகையும் ஒருநாள் தரைமட்டமாகிக் கழுதை மேயும் பாழ்நிலமாக மாறக்கூடும்.

54. பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்

பொற்கொடி மகளிரும் மைந்தரும் கூடி

நெற்பொலி நெடுநக ராயினும் ஆகும்

எருதும் கழுதையும் மேயும் அந்தப் பாழ்நிலமும் ஒருநாள் பெண்டிரும் அவர்தம் பிள்ளைகளும் மகிழ வாழும் நெற்களஞ்சிய நகரம் ஆகக்கூடும்.

55. மணஅணி அணிந்த மகளிர் ஆங்கே

பிணஅணி அணிந்துதம் கொழுநரைத் தழீஇ

உடுத்த ஆடை கோடியாக

முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்

அங்கே மணக்கோலத்தில் ஜொலிக்கும் மகளிர், இறந்த தம் கணவனைத் தழுவி, அவன் உடுத்த ஆடையே அவனுக்குக் கடைசி உடையாக மாறும் கோலம் கண்டு, தாம் முடிந்த கூந்தலை விரித்தழும் நிலையும் வரக்கூடும்.

56. இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே

வறியவர் பிச்சை புகுவது வழமையான நடப்பே.

57. இரந்தோர்க்கு ஈவரும் உடையோர் கடனே

பிச்சை கேட்பவருக்கு நிச்சயம் ஈவது காசுள்ளோருக்குக் கடமையே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30