வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 58 - 65
58. நல்ல ஞாலமும் வானமும் பெறினும்
எல்லாம் இல்லை இல்லில் லோர்க்கே
நற்சுற்றமும், நட்பும், சொத்தும், சுகமும் இருந்தாலும் மனைவி இல்லாதோர்க்கு எல்லாம் இருந்தும் எதுவும் இருக்காது.
59. தறுகண் யானை தான்பெரி தாயினும்
சிறுகண் மூங்கிற் கோற்கஞ் சும்மே
எதற்கும் அஞ்சாத யானையும் பாகன் கையிலிருக்கும் சிறு மூங்கில் அங்குசத்திற்கு அஞ்சி நடுங்கும்.
60. குன்றுடை நெடுங்காடு ஊடே வாழினும்
புன்றலைப் புல்வாய் புலிக்கஞ் சும்மே
உயர்ந்த குன்றுகள் நடுவே செறிந்த காட்டில் வாழும் மானும் அங்கிருக்கும் புலியினைக் கண்டு அஞ்சும்.
61. ஆரையாம் பள்ளத்து ஊடே வாழினும்
தேரை பாம்பிற்கு மிகஅஞ் சும்மே
புற்செறிந்த புதருக்குள்ளே வாழும் தேரையும் அங்குய்யும் பாம்புக்கு அஞ்சும்.
62. கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டிற்
கடும்புலி வாழும் காடு நன்றே
கொடுங்கோல் அரசன் ஆட்சிபுரியும் நாட்டில் அடிமையாய் வாழ்வதை விட, கொலைப் புலி வாழும் காட்டில் சுதந்தரமாய் வாழ்வது நன்று.
63. சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்
தேன்தேர் குறவர் தேயம் நன்றே
படித்த பண்புடையோர் இல்லாத தொல்குடி ஊரில் வாழ்வதை விட குறவர் தேன் தேடித் திரியும் மலைகளில் வாழ்வது நன்று.
64. காலையும் மாலையும் நான்மறை ஓதா
அந்தணர் என்போர் அனைவரும் பதரே
நாளின் இருவேளையும் வேதம் ஓதாதவர் அந்தணர் என்று அழைத்துக் கொள்ளத் தகுதியற்றவர்.
65. குடிஅலைத்து இரந்துவெங் கோலொடு நின்ற
முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே
தன் நாட்டின் குடிமக்களையே உணவுக்கு இரந்து திரிய வைக்கும் கொடுங்கோன் அரசனும் வீணன்தான்.