வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 66 - 74

 66. முதலுள பண்டம்கொண்டு வாணிபம் செய்து

அதன்பயன் உண்ணா வணிகரும் பதரே

முதலீட்டுக்குச் செல்வம் இருந்தும் அதைக் கொண்டு வணிகம் செய்யாத வியாபாரியும் வீணனே

67. வித்தும் ஏரும் உளவாய் இருப்ப

எய்த்துஅங்கு இருக்கும் ஏழையும் பதரே

விதையும், நிலமும் தயாராக இருந்தும் வெறுமனே சோம்பி இருக்கும் விவசாயியும் வீணனே.

68. தன்மனை யாளைத் தாய்மனைக்கு அகற்றிப்

பின்பவள் பாராப் பேதையும் பதரே

இல்லத்தின் இலக்குமியை அவள் பிறந்த வீட்டுக்குத் துரத்திவிட்டு பாராமாமுகத்துடன் இருப்பவனும் வீணனே.

69. தன்மனை யாளைத் தனிமனை இருத்தி

பிறமனைக்கு ஏகும் பேதையும் பதரே

வீட்டில் இல்லத்தரசி இருக்க இன்னொரு மனையில் பெண் தேடிச் செல்லும் முட்டாளும் வீணனே.

70. தன்னா யுதமும் தன்கைப் பொருளும்

பிறன்கைக் கொடுக்கும் பேதையும் பதரே

தனக்கு இயல்பில் வாய்த்த திறன்களையும் செல்வத்தையும் பிறருக்குக் கொடுக்கும் மூடனும் வீணனே.

71. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்

சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேண்மின்

சொற்களைப் பறை போலவும், நாக்கை சவுக்கு போலவும் பயன்படுத்திச் சான்றோர் சொல்லும் சொல்லை தட்டாது கேட்க வேண்டும்.

72. பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்

மெய்போ லும்மே மெய்போ லும்மே

நா வன்மை உடையவனின் பசப்புப் பொய்களும் உண்மை போலவே தோற்றமளிக்கும்.

73. மெய்யுடை ஒருவன் சொல்லாட் டாமையால்

பொய்போ லும்மே பொய்போ லும்மே

சொல்வன்மை இல்லாதவன் உண்மையே பேசினாலும் அது பொய் போலவே ஒலிக்கும்.

74. இருவர் சொல்லையும் எழுதரம் கேட்டே

இருவரும் பொருந்த உரையார் ஆயின்

மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம்

மனமுற மறுகிநின் றழுத கண்ணீர்

முறையுறத் தேவர் மூவர் காக்கினும்

வழிவழி ஈர்வதோர் வாளாகும்மே

இருதரப்பு நியாயங்களையும் திரும்பத் திரும்பக் கேட்டு, இருவருக்கும் சமநீதி வழங்கவில்லை என்றால், வஞ்சிக்கப்பட்டவர் ஆற்றாது அழுத கண்ணீர் நீதி வழுவித் தீர்ப்புரைத்தவரின் பரம்பரைக்கே கேடு விளைவிக்கும். நீதி வழுவாது நிற்றல் வேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30